இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் பலர் பின்னடைவை சந்திப்பதற்கு ‘முகப்புத்தகம் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பாவனையே காரணமாக அமைந்துள்ளதாக முன்னாள் அணித் தலைவரான திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.
தனியார் சிங்கள வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த நேரத்தில் தற்போதைய இலங்கை கிரிக்கெட் பின்னடைவுக்கு என்ன காரணம் என்று வினாவியிருந்த நிலையிலேயே திலக்கரத்ன தில்ஷான் குறித்த நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இன்றைய கால கிரிக்கெட் வீரர்களிடையே கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது. பயிற்சிகளில் கவனம் செல்லுத்துவதிலும் பார்க்க அவற்றினை புகைப்படம் எடுத்து பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உடனடியாக பதிவேற்றம் செய்வதை நான் பல தடவைகள் அவதானித்துள்ளேன்.
இதன் காரணமாக முக்கியமான பயிற்சிகளில் போது அவர்களது முழு கவனம் சிதறடிக்கப்படுகின்றது. இதன் முலம் குறித்த பயிற்சிகள் முழுமையடைவதாக நான் நினைக்கவில்லை.
நான் அணியில் இருந்த காலத்தில், சுற்றுப்பயணங்களின் போது ஒரே அணியாக ஒன்றாகவே இருந்தோம். எதிர்வரும் போட்டிகள் மற்றும் அவற்றுக்கான திட்டமிடல்கள் குறித்தே பேசிக்கொண்டிருப்போம்.
ஆனால், இன்று நிலைமை தலைகிழாக உள்ளது. இப்போதுள்ள இளம் வீரர்களின் கவனம் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் தங்கியுள்ளது. அந்த வகையில் அணிக்குள் இருக்ககூடிய புரிந்துணர்வு இல்லாமல் இருகின்றது.
எமது இளம் வீரர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். தாய் நாட்டுக்காக விளையாடும் பொழுது தத்தமது பொறுப்புக்களை உணர்ந்து போட்டியின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து அதற்கமைய செயல்பட வேண்டும்.
ஒரு முறை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு மாத கால சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது என்னுடைய மனைவி பிரசவித்து இருந்தார். கட்டாயம் அவர் பக்கத்தில் நானிருக்க வேண்டிய நிலையில் குறித்த போட்டித் தொடரில் என்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி இருந்ததோடு போட்டிகளில் முழு கவனம் செலுத்தியிருந்தேன். அத்துடன் முத்த வீரர் என்ற வகையில் இலகுவாக எனக்கு இலங்கைக்கு வந்திருக்கலாம்.
எனினும், நான் அவ்வாறு செய்யவில்லை. எமது கிரிக்கெட் ரசிகர்கள் எம்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்நம்பிக்கையை நாம் ஒரு அணியாக தக்க வைத்தோம்.
வெற்றியோ தோல்வியோ, நாம் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். எதிரணிகளை சவாலுக்குட்படுத்த வேண்டும். அப்போதுதான் இயல்பாகவே முகப்புத்தகங்களில் இடம் பெறுவோம். நமது மதிப்பு அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அணித் தலைவர் மற்றும் தற்போதய கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அருஜுன ரணதுங்க, இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்த மோசமான பெறுபேறுகள் காரணமாக இனிமேல் தேசிய கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை எனவும் அதற்கு பதிலாக இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரை பார்க்கவிருப்பதாகவும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
: திலக்கரத்ன தில்ஷான்
...


Post a Comment