மியன்மார் ராக்கெய்ன் மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் அரேபிய யூனியன் (The Arab Union) மற்றும் அரேபிய பாராளுமன்றம் (Arab Parliament) ஆகியன கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
ரோஹிங்யா முஸ்லிம்களின் கஷ்டங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்துவதனூடாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் படுகொலைகளை நிறுத்த சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரேபிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பாக அரேபிய பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஆகிய அமைப்புகளை அரேபிய பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.
குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு எதிராக நீதியை நடைமுறைப்படுத்த மியன்மார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரேபிய யூனியன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மியன்மார் அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடம் குவைட் மற்றும் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குவைட் தலைநகரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த வன்முறைகளை சர்வதேச நிறுவனங்களுக்குக் கொண்டுசெல்ல உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக துருக்கிக்கான சவூதி அரேபிய தூதுவர் வலீத் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
அண்மைய வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுமார் 123,600 பேர் பங்களாதேஷ் நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும், பல்லாயிரம் பேர் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.


Post a Comment